வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கப்படவுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக முதற்கட்டமாக பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.