உளுந்தூர்பேட்டை வாகன விபத்து தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாக, மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணை நிறைவடைந்தது.
கடந்த மே மாதம் 2 ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் சென்றார். அப்போது உளுந்தூர்பேட்டையில் தனது கார் மீது வேறு ஒரு காரை மோத செய்து சிலர் தன்னை கொலை செய்ய முயன்றதாக
ஆதீனம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால், அவர் தவறான தகவலை கூறுவதாக கூறி, சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது.
ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேலானதால் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.
இதையடுத்து மதுரை ஆதீன மடத்திற்கு நேரில் சென்ற சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரிடம் ஒரு மணி நேரம் தனியாக விசாரணை நடத்தினர். மதுரை ஆதீனம் குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிவடைந்து ஓய்வு எடுத்து வருவதால் படுத்துகொண்டே போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீன தரப்பு வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன், காவல் துறையினரின் விசாரணைக்கு மதுரை ஆதீனம் முழுமையான ஒத்துழைப்பு அளித்ததாக கூறினார்.
அறுவை சிகிச்சை முடிந்து படுக்கையில் இருக்கும் ஆதீனத்திடம் விசாரணை நடத்துவது அவருக்கு இடையூறாக இருக்கும் என கருதுவதாக, மதுரை மாநகர மாவட்ட பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.