கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சந்தேக நபரின் வீடியோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை மர்மநபர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குற்றம் நிகழ்ந்து 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை குற்றவாளியை கைது செய்ய முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் வீடியோவை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. சந்தேக நபர் மின்சார ரயிலில் பயணம் செய்த புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து செல்போன் எண்ணுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காவல்துறை, சந்தேக நபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.