நேதாஜி குறித்த வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் பாரத் நேதாஜி அறக்கட்டளை தொடக்க விழாவில் இதுகுறித்து அவர் பேசியதை தற்போது பார்க்கலாம்.
திருப்பூரில் நடைபெற்ற பாரத் நேதாஜி அறக்கட்டளை தொடக்க விழாவில் இளைஞர்கள் பொது வாழ்க்கைக்கு எப்போது வர வேண்டும் என்ற தெளிவை பெறுங்கள் எனும் தலைப்பில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார்.
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரத் நேதாஜி அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
மேலும் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார் மற்றும் மாவட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த அறக்கட்டளையின் மூலமாக இளைஞர்களை ராணுவத்தில் சேர ஊக்குவித்தல் தேசபக்தி குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறை மற்றும் சமூக சிந்தனைகளை இளைஞர்களுக்கு கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே பேசிய அண்ணாமலை நேதாஜி குறித்து வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. நேதாஜி குறித்து பேச வேண்டிய அவசியம் உள்ளது.
மகாத்மா காந்தி அளவுக்கு நேதாஜியின் சரித்திரம் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
மெரினா பீச்சில் தலைக்கு ஒன்று காலுக்கு ஒன்று என ஏசி வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆயிரம் தென்னை மரத்தில் 10 தென்னை மரத்தை அகற்றிவிட்டு கள்ளுக்கடை போராட்டம் செய்தவர்கள், 1000 பேர் கோவில் திறந்த பின்னர் கோவில் திறந்தவர்கள் எல்லாம் தற்போது தலைவர்கள் என சொல்லிக் கொள்கிறார்கள்.
குடும்பம், வேலை, வருமானம் உள்ளிட்டவற்றை முடித்த பின்னரே பொதுவாழ்க்கைக்கு வர வேண்டும் . ஆனால் அரசியல் கட்சிகள் இன்று முழு நேர உழைப்பவர்களை எதிர்பார்க்கிறார்கள். முழு நேர அரசியல்வாதிகள் வந்த பின்னர் தான் தவறுகள் அதிகரித்து விட்டது என்றும் அவர் கூறினார்.
வேகமாக வளரும் நாட்டில் நீங்கள் நல்ல முறையில் சம்பாதிக்க வேண்டும் என்றும், களத்தில் வந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு ஆண்டு பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
8 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு கோவையில் ஒரு ஆண்டு வேலை செய்தேன். அந்த சம்பளத்தில் வீட்டு வாடகை பெட்ரோல் என அனைத்தையும் சமாளிக்க வேண்டும். எந்த கோவிலில் என்ன அன்னதானம் என் செந்தில் சொல்வது போல் எந்த ஹோட்டலில் எந்த உணவு விலை குறைவு என அறிந்து வைத்திருப்பேன். அந்த ஒரு வருடம் என் வாழ்வில் சிறந்த ஆண்டு. என்னை செதுக்கியது அந்த 12 மாதங்கள் தான் என்றும் கூறினார்.
டீ கடையில் அமர்ந்து அம்பானி அப்படி இப்படி என பேசுகிறார்கள் ஆனால் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி அம்பானி ஆண்டுக்கு வரி செலுத்துகிறார். நீங்களும் சம்பாதிக்க வேண்டும் என்றால் சம்பாதியுங்கள் அதில் எந்த தவறும் இல்லை. உங்கள் தேவையை உணர்ந்து தெளிவோடு இங்கிருந்து செல்லுங்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.