சாவன் மாத இரண்டாவது திங்கட்கிழமையையொட்டி வடமாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
வடமாநிலங்களில் சிவபெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படும் சாவன் மாதத்தின் சோமவார வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மங்காமேஷ்வர் கோயிலில் குவிந்த பக்தர்கள், சிவலிங்கத்திற்கு பால், பூக்கள், வில்வ இலைகளால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதேபோல் கோரக்பூரில் உள்ள முக்தேஷ்வர் நாத் கோயிலில் குவிந்த பக்தர்கள், வில்வ இலைகள் மற்றும் பாலாபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜார்கண்ட் மகாதேவ் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகா காலேஷ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான இக்கோயிலில், சாவன் மாத 2ஆவது சோமவாரத்தையொட்டி பஸ்ம ஆரத்தி நடைபெற்றது. இதேபோல் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மங்கள ஆரத்தி மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.