மணப்பாறை அருகே அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிபாளையத்தை சேர்ந்த 25 பேர், சுற்றுலா வாகனத்தில் மணப்பாறையில் உள்ள வீரப்பூர் பொன்னர் சங்கர் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பியபோது புத்தாநத்தம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், புத்தாநத்தம் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதாகக் குற்றஞ்சாட்டி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்களின் மறியல் போராட்டத்தால் மணப்பாறை – துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.