கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் நலக்குறைவால் காலமானார்.
கேரள அரசியல் தலைவர்களில் மிக மூத்த தலைவராக விளங்கிய வி.எஸ்.அச்சுதானந்தன், ஆலப்புழாவில் உள்ள புன்னப்புராவில் 1923-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி பிறந்தார்.
4 வயதில் தாயையும், 11 வயதில் தனது தந்தையையும் இழந்த வி.எஸ்.அச்சுதானந்தன், தனது இளமைப் பருவத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
1938-ல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1940-ம் ஆண்டு அச்சுதானந்தன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
தொடர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அச்சுதானந்தன், 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் அச்சுதானந்தனும் ஒருவராவார்.
1980 – 1992-ம் ஆண்டு வரை இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.
கேரள நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் 4-வது தலைவராகவும் அச்சுதானந்தன் பதவி வகித்துள்ளார்.
2006 முதல் 2011-ம் ஆண்டு வரை கேரளாவின் முதலமைச்சராகப் பதவி வகித்த அச்சுதானந்தன்,
1992 – 1996, 2001 – 2006, 2011 – 2016 காலகட்டத்தில் கேரள அரசின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார்.
உடல்நிலை கருதி அரசியலில் இருந்து விலகி இருந்த அச்சுதானந்தன் அண்மையில் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அச்சுதானந்தன் வயது முதிர்வு காரணமாகச் சிகிச்சை பலனின்றி தனது 101-வது வயதில் காலமானார்.