நாட்டையே உலுக்கிய மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் அம்மாநில உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மும்பையில் 2006 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி புறநகர் ரயில்களில் ஆர்டிஎக்ஸ் ரக குண்டுகள் வெடித்தன.
இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது குறித்த வழக்கு விசாரணை மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் எனக் கடந்த 2015 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதில் ஒருவர் விடுவிக்கப்பட்ட நிலையில், 5 பேருக்கு மரண தண்டனையும், மீதமுள்ள 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல எனத் தெரிவித்து 12 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.