அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விரைவாக விசாரித்து முடிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சூரியமூர்த்தி, புகழேந்தி உள்ளிட்டோர் அளித்த புகார்கள் மீதான ஆரம்பக்கட்ட விசாரணையை நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மனுதாரர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த தேர்தல் ஆணையம், ஆரம்பக்கட்ட விசாரணை முடிக்கப்பட்ட பின்பு, இந்த பிரச்சனை குறித்து உரிய முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு, விசாரணை தொடர்பாக காலவரம்பு நிர்ணயிக்கத் தேவையில்லை என்றும், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.