அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண் முன்னே, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குண்டுக்கட்டாக கைது செய்யப்படும் ஏஐ வீடியோ காட்சிகள் இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஒபாமா தனது பதவிக் காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக டிரம்ப் அண்மையில் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவர் உண்மையில் கைது செய்யப்பட உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
“யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை” எனக் கூறுவதை போல் தொடங்கும் வீடியோவை ட்ரூத் என்ற சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியவர் வேறு யாருமல்ல, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான்.
அமெரிக்க அதிபர் மாளிகையான ஓவல் அலுவலகத்தில், ஷோபாவில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் அமர்ந்திருக்க, திடீரென உள்நுழைந்த FBI அதிகாரிகள் ஒபாமாவை தரையில் முழங்காலிட வைத்து, கைகளை பின்னால் இழுத்து விலங்கிடுகிறார்கள். இதனை தற்போதைய அதிபர் டிரம்ப் சிரித்தவாறே பார்த்துக் கொண்டிருப்பதும், சிறை கம்பிகளுக்குப் பின்னால் ஒபாமா கைதிகளுக்கான சீருடையில் அமர்ந்திருப்பது போலவும் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.
45 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை டொனால்ட் டிரம்ப் பதிவிட காரணம் என்ன என பல்வேறு தரப்பினரும் கேள்விக் கணைகளை வீசியுள்னர். சிலரோ இது AI வீடியோ என்பதை அதிபர் டிரம்ப் குறிப்பிடவில்லை என்றும், பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது ஏன் என்றும் கமெண்ட் அடித்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக பராக் ஒபாமாவும், அவரது உயர் மட்ட அதிகாரிகள் 2016ம் ஆண்டு உளவுத்துறையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கபார்ட்.
டிரம்புக்கு ரஷ்யாவுடன் தொடர்பு இருப்பதாக ஒபாமா கட்டுக்கதைகளை உருவாக்கியதற்கு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், ஒபாமாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று துளசி கபார்ட் வலியுறுத்தியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக பராக் ஒபாமாவை மிகப்பெரிய தேர்தல் மோசடி பேர்வழி என டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் AI வீடியோ முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
1972 தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாஷிங்டன் டிசியில் வாட்டர்கேட் வளாகத்தில் உள்ள ஜனநாயகக் கட்சியின் தேசிய தலைமையக அலுவலகங்களில் கொள்ளை நடந்த நிலையில், அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் பிரச்சார குழுவுடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் விஷயத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதிபர் ரிச்சர்ட் நிக்சன் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனச் சர்ச்சை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக 1974ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிகழ்வையும், துளசி கபார்ட் கூறிய குற்றச்சாட்டையும் ஒப்பிடும் இணையவாசிகள், அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா மீது உண்மையில் வழக்கு தொடர தீர்மானித்துள்ளாரா என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர்.