கிருஷ்ணகிரி அருகே கனிமவள அதிகாரிகள் எனக் கூறி லாரிகளை நிறுத்தி பணம் வசூலில் ஈடுபட்ட நபர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பர்கூர் அடுத்த கந்திகுப்பம் பகுதியில் சென்ற லாரியை கனிமவள அதிகாரிகள் எனக் கூறி 4 பேர் தடுத்து நிறுத்தியுள்ளனர். முறையான ஆவணங்கள் இருந்தபோதும் அவர்கள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
சந்தேகம் அடைந்த ஓட்டுநர், சக ஓட்டுநர்களுக்குத் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஓட்டுநர்கள், 4 பேரையும் பிடித்து பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது கனிமவள திருட்டு தொடர்பாக அதிகாரிகளுக்குத் தகவல் அளிப்பதாக 4 பேரும் கூறியுள்ளனர். இதையடுத்து அங்குச் சென்ற போலீசார், கனிமவள அதிகாரிகள் எனக் கூறியவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்காமல் விடுவித்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பர்கூர், மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லாரிகளை நிறுத்தி சோதனை செய்து பணம் வசூலில் ஈடுபட்டவர்கள் யார் எனவும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் லாரி ஓட்டுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.