வங்கதேச விமானப்படைக்குச் சொந்தமான சீனாவின் F-7 BGI போர் விமானம், டாக்காவில் கல்லூரி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களே அதிகமாக விபத்துக்குள்ளாகி வருவதால் பாதுகாப்பு நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. டாக்காவில் விபத்துக்குள்ளான F-7 போர் விமானம் எவ்வளவு சக்தி வாய்ந்தது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1962ம் ஆண்டு முதன்முறையாக மிக்-21 ரக போர் விமானத்தைச் சீனாவுக்கு சோவியத் ரஷ்யா வழங்கியது. தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான மிக் ரக போர் விமானங்களைச் சீனா வாங்கியது.
அதன்பிறகு, மிக் ரக போர்விமானங்களின் தொழில்நுட்பத்தைச் சீனா காப்பி அடித்தது. எஃப்-7 என்ற புதிய போர் விமானத்தைச் சீனா உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது. காப்பி அடிப்பதன் மூலம், சீனா தனது நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தியதாகச் சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் J-7 போர் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக, F-7 BGI என்பது வங்கதேசத்துக்காக பிரத்தியேகமாகச் சீனா தயாரித்து வழங்கியது. இது ஒரு இலகுரக, மல்டி-ரோல் போர் விமானமாகும்.
ஏற்கெனவே வங்கதேச விமானப்படையிலிருந்த F-7M மற்றும் F-7MB போன்ற பழைய விமானங்களை மாற்றி இந்த போர் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு பழையதாக இருந்தாலும்,நவீன தொழில்நுட்ப திறன்களுடன் இந்த விமானம் விளங்குகிறது.
வங்கதேசத்தைத் தவிர, மியான்மர், நைஜீரியா, ஈரான், எகிப்து, ஜாம்பியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் F-7 BGI போர் விமானத்தைப் பயன்படுத்துகின்றன. PL-9C போர் விமானத்தைப் போல F-7 BGI, வானிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். மேலும் தரை இலக்குகள் மீதும் தாக்குதல்களை நடத்தக் கூடிய ஆற்றல் கொண்டதாகும்.
மணிக்கு 2,175 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது. முக்கியமாக எதிரி விமானங்களை இடைமறிப்பதற்காக வானில் 17,500 மீட்டர் உயரத்தை இந்தப் போர் விமானம் தொடும் என்று கூறப்படுகிறது. சிறிய இறக்கைகள் காரணமாக, புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் இந்த F-7 BGI போர் விமானத்தைக் கையாள்வது கடினமாக இருக்கும்.
2013ம் ஆண்டில், இந்த போர் விமானத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடைசியாகத் தயாரித்த F-7 விமானங்களை அதே ஆண்டு வங்க தேசத்துக்குச் சீனா வழங்கியது. F-7 ரக போர் விமானங்களை இடைமறிக்கும் விமானமாக, சீன விமானப்படை உட்படப் பல நாடுகள் இன்றும் பயன்படுத்தி வருகின்றன.
2025ம் ஆண்டின் தொடக்கத்தில், வங்கதேசத்திடம் 87 போர் விமானங்கள் உள்ளன என்றும், அவற்றில் 40 போர் விமானங்கள் F-7 ரக போர் விமானங்கள் என்றும், இங்கிலாந்தைச் சேர்ந்த பாதுகாப்பு சிந்தனைக் குழுவின் சர்வதேச ஆய்வுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை, வங்க தேச விமானப்படையின் F-7 BGI போர் விமானம், தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள Milestone மைல்ஸ்டோன் பள்ளி & கல்லூரி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வங்கதேச வரலாற்றின் மிக மோசமான விமான விபத்தாக இது கருதப்படுகிறது.
“தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து நடந்தாக, வங்கதேச இராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR), தெரிவித்துள்ளது. 1992ம் ஆண்டு முதல், வங்கதேச விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் பயிற்சி விமானங்கள் 27 விபத்துகளைச் சந்தித்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் வங்கதேசத்தில் 11 விமான விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஏழு சீனப் போர் விமானங்கள் ஆகும். மூன்று ரஷ்யப் போர்விமானங்களும், ஒரு செக் குடியரசு போர் விமானமும் விபத்தில் சிக்கியுள்ளன.
2022ம் ஆண்டில், சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சியாங்யாங்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் J-7 போர் விமானம் விபத்துக்குள்ளானது. அதேபோல், கடந்த ஜூன் மாதம், மியான்மர் விமானப்படையின் J-7 விமானம், அந்நாட்டின் Pale Township பகுதியில், மர்மமான சூழ்நிலையில், விபத்துக்குள்ளானது.
சீனப் போர் விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலையில், வேறு வழியில்லாமல், பல்வேறு அழுத்தங்கள் காரணமாக வங்கதேசம், சீனப் போர் விமானங்களையே வாங்கி பயன்படுத்தி வருகிறது.
ஏற்கெனவே, அபாயகரமான விபத்துக்களின் மோசமான வரலாற்றைக் கொண்டுள்ள F-7, இப்போது மீண்டும் விபத்துக்குள்ளாகி இருப்பது, எஃப்-7 போர் விமானங்களின் பாதுகாப்பு குறித்து சர்ச்சையை மீண்டும் எழுப்பியுள்ளது.