இந்திய மன்னர்களில் ராஜேந்திர சோழன் அளவுக்குக் கடல் கடந்து சென்று வெற்றிபெற்றவர்கள் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தென்கிழக்கு ஆசியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழீஸ்வரத்தைப் பற்றிய செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திலேயே, ராஜேந்திர சோழர் இளவரசராக நியமிக்கப்பட்டார். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசில் ராஜேந்திர சோழர் ஆட்சி செய்த காலகட்டமே பொற்காலமாகும்.
அப்போதே, வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் சோழப் படைகளுக்குத் தலைமை தாங்கி வெற்றிகளைக் குவித்து இளம் வயதிலேயே தனது போர்த் திறனை வெளிப்படுத்திய ராஜேந்திர சோழர் ‘பஞ்சவன் மாராயன்’, ‘மும்முடிச்சோழனின் களிறு’ என்று போற்றப்பட்டார்
கி.பி. 1014-ல் முழுமையான சோழப் பேரரசின் அரியணை ஏறிய பிறகு, முதல் 10 ஆண்டுகள் போர்க்களத்திலேயே இருந்தார். ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் நிலப் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார். சோழ சாம்ராஜ்யத்தை ஒரு பன்னாட்டுச் சாம்ராஜ்யமாக ராஜேந்திர சோழர் நிலைநிறுத்தினார்.
தென்கிழக்கு ஆசியாவில் முதல் வெற்றியாக ஈழத்தை வென்றார். அதன் பிறகு, சாளுக்கியத் தேசத்தை வென்ற பின், கிழக்கு கடற்கரை முழுவதையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ராஜேந்திர சோழர், கி.பி. 1019-ல் கங்கை நோக்கிப் படையெடுத்து, வங்கதேசத்துப் பால வம்ச மன்னனான மகிபாலனை வெற்றிக் கொண்டார்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் மாலத்தீவுகள் மீதும் படையெடுத்து வெற்றிபெற்றார். இதன் மூலம், இந்திய வரலாற்றிலேயே கடல் கடந்து அயல்நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்ற முதல் மன்னன் என்று சாதனையைப் படைத்தார் ராஜேந்திர சோழர். இந்த வெற்றியின் மூலம் “கடாரம் கொண்டான்” என்ற பெருமைமிகு பட்டத்தையும் பெற்றார்.
மேலும், மூன்று முறை சுமார் 2000 கிலோமீட்டர் தூரம் வரை படைநடத்தி வென்ற ஒரே இந்திய மன்னர் என்ற பெருமையும் ராஜேந்திர சோழரையே சேரும். இந்தியப் பெருங்கடல் முழுமையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஜேந்திர சோழர், கிட்டத்தட்ட 12 துறைமுக நகரங்களை நிர்மாணித்து வந்ததாகக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
பிறநாட்டு வணிக கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வந்த நிலையில், தன் கடற்படையால் அந்தந்த நாட்டு வணிகக் கப்பல்களுக்குத் தகுந்த பாதுகாப்பும் அளித்துள்ளார் ராஜேந்திர சோழர்.
ராஜேந்திர சோழரின் முதல் சாதனை, இந்தியா முழுவதையும் வெற்றிகொண்டது. இரண்டாவது சாதனை, கங்கை வெற்றியின் அடையாளமாக, “கங்கை கொண்ட சோழன்” என்ற பாராட்டப் படும் ராஜேந்திர சோழர் “கங்கைகொண்ட சோழபுரம்” என்ற புதிய சோழ சாம்ராஜ்ய தலைநகரத்தை உருவாக்கியது.
வளமிக்க தஞ்சாவூரிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில், கொள்ளிடத்துக்கு வடகரையில் ஒரு வறண்ட பகுதியைத் தேர்வு செய்து புதிய தலைநகரை நிர்மாணித்தார். அகழி, கோட்டைச் சுவருடன் கூடிய இந்நகரம் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலமும் உடையதாக கட்டப் பட்டுள்ளது.
எந்த தலைநகருக்கும் நீர்வளம் மிக முக்கியம் என்பதால் 20 மைல் நீளத்துக்கு ஒரு பெரிய ஏரியை ஏற்படுத்தினார். கங்கையின் நீரால் நிரப்பிய இந்த ஏரி சோழ கங்கம் என்று புகழப் படுகிறது. 1025ல் உருவான கங்கை கொண்ட சோழபுரத்தில், தஞ்சையில், உள்ள பெரும்கோயிலைப் போலவே, தனது வழிபடும் கடவுளான சிவபெருமானுக்கு ஒரு பிரமாண்ட திருக்கோயிலை மாமன்னர் ராஜேந்திர சோழர் கட்டினார்.
தஞ்சைப் பெருவுடையாரின் திருப்பெயரையே கங்கை கொண்ட சோழீஸ்வர பெருமானுக்கும் ராஜேந்திர சோழர் வைத்துள்ளார். கங்கை கொண்ட சோழேச்சுவரர், பிரகதீஸ்வரர், பெருவுடையார் என்று இத்தலத்து இறைவன் அழைக்கப்படுகிறார். அம்மை- பெரிய நாயகி, பிருகந்நாயகி என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள். தலமரமாக புன்னைமரமும் வன்னிமரமும் விளங்குகிறது.
தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கம் இந்தக் கோயிலில் தான் உள்ளது. தஞ்சை பெரிய கோவில் சிவலிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவுடைய ஆவுடையாரும் கொண்டது. ஆனால் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் சிவலிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது.
தஞ்சையில் உள்ள சிவலிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள சிவலிங்கம் பெண் அம்சமாகும். தஞ்சையில் உரல் வடிவம் என்றால் இங்கே உடுக்கை வடிவமாகும். ஒரே கல்லால் ஆன மூலவர் சந்திரகாந்தக் கல்லின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் வெப்பத்தையும் தருகிறது.
கிழக்கு பெரிய வாயிலில் நுழைந்தவுடன், சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்ட பெரிய நந்தி தரையில் அமைக்கப் ட்டுள்ளது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை இந்த பெரிய நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள மூலவர் சிவலிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத காட்சியாகும்.
160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது போலவே இங்கும் பூமியில் விழுவதில்லை. திருமுறை ஆசிரியர்களில் ஒருவரான கருவூர்த்தேவர் இத்தலத்துப் பெருமான் மீது திருவிசைப்பா பதிகம் பாடி போற்றியுள்ளார்.
பெயருக்கு ஏற்றார்போல் அம்மை பெரியநாயகி 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறாள். நிமிர்ந்து பார்த்துத் தான் அம்மையை வணங்க வேண்டும். இங்குச் சரஸ்வதி, லட்சுமி இருவரும் தியானக்கோலத்தில் இருப்பதால், இவர்கள் “ஞான சரஸ்வதி, ஞான லட்சுமி” என அழைக்கப்படுகின்றனர்.
இந்தக்கோயிலில் உள்ள தனி சன்னதியில் உள்ள துர்க்கை தான், ராஜேந்திர சோழரின் குலதெய்வம். 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருள் பாலிக்கிறாள். இத்தகைய கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம் என்பதால் இந்த துர்கை “மங்கள சண்டி” என்று போற்றப்படுகிறாள்.
எப்போது வந்தாலும், ராஜேந்திர சோழர், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவபெருமானை வணங்குவார். அதன் அடையாளமாக இன்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர் தான் சிவபெருமானை மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.
இத்திருக்கோயிலில், வலக்கையில் எழுத்தாணியுடன் உள்ள விநாயகர், கணக்கு விநாயகர் என்றும்,கனக விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். தென்கிழக்கு மூலையில் முப்பரிமாண நடராஜர் சிலை இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இத்திருக்கோயில் சோழர் கால கட்டட கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ராஜேந்திரச் சோழனின் மூன்றாவது மகத்தான சாதனைதான் ஆச்சரியமானது. அந்த காலகட்டத்தில் உலகிலேயே மிகச் சிறந்த கடற்படையை வைத்திருந்த ராஜேந்திர சோழர், தெற்காசியாவை வென்ற போதும்,எந்த நாட்டையும் இணைக்கவில்லை. ஏனெனில் நாடுகளைப் பிடித்து ஆட்சி செய்வது ராஜேந்திர சோழரின் நோக்கமாக இருக்கவில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஒரு வேளை தான் வென்ற பகுதிகளை முழுவதுமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்சி நடத்தியிருந்தால், ஒரு தனியாளாக, 4 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவைச் சோழ பேரரசாகக் கொண்டு ஆட்சி செய்திருப்பார். தற்போது இந்தியாவின் பரப்பளவு 3.287 லட்சம் சதுர கி.மீ தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சையிலிருந்த அனைத்தையும் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு 1025 -ல் மாற்றினார் ராஜேந்திர சோழர். சுமார் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழீசுவரத்தை, இன்றும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய வரைபடத்தையே மாற்றி வரைந்த மாமன்னர் ராஜேந்திர சோழரைப் போற்றும் விதமாகக் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி அவர் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நன்னாளில் பிரம்மாண்டமாக ஆயிரம் ஆண்டு விழா நடைபெற உள்ளது.
இந்தியாவில் எந்த ஒரு மன்னரை எடுத்துக்கொண்டாலும் ஏதோ ஒரு விஷயத்தில்தான் மகத்தான சாதனையைப் படைத்திருப்பார்கள். ஆனால், மாமன்னர் ராஜேந்திர சோழர் எல்லா விதத்திலும் சாதனை படைத்தவர். அதுவும் ஆட்சிக்கு வந்த முதல் 10 ஆண்டுகளிலேயே இத்தனை பெரிய சாதனைகளையும் செய்து முடித்தார்.
கங்கைச் சமவெளியை ராஜேந்திர சோழன் வென்று ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ராஜேந்திர சோழரைச் சிறப்பிக்கும் விதமாக, நாணயம் வெளியிடுவது மிகப் பொருத்தமானதே.