அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் சிவகங்கையில் உள்ள தனியார் கிளீனிக்கில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அங்கிருந்த டிவிஆர் ஹார்ட் டிஸ்க்குகளை கழட்டி எடுத்துச் சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கடந்த மாதம் 28ஆம் தேதி, போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
மடப்புரம் கோயில், அஜித்குமார் தாக்கப்பட்ட இடம் ஆகிய இடங்களில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், கோயில் ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட சாட்சிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சிவகங்கையில் அஜித்குமார் உடலை தனியார் ஆம்புலன்ஸுக்கு மாற்றியதாக கூறப்படும் இடமான தனியார் கிளீனிக்கில் சிபிஐ டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர். தனியார் கிளீனிக் மருத்துவரிடம் விசாரனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் பதிவான டிவிஆர் ஹார்ட் டிஸ்க்குகளை ஆய்வு செய்ததுடன், அதனை கையோடு கழட்டி எடுத்துச் சென்றனர்.