திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற சம்பவத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
உடுமலைப்பேட்டை அடுத்த ஈசல் திட்டு பகுதியைச் சேர்ந்த மணியன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, உடலை சொந்த ஊர் கொண்டுசெல்ல சாலை வசதி இல்லாததால் மணியனின் உடலை தொட்டில் கட்டி உறவினர்கள் வனப்பகுதி வழியே தூக்கிச் சென்றனர். சாலை வசதி ஏற்படுத்தக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்தில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட பல ஆயிரம் கோடி நிதி எங்கே சென்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்கப்படாததால் மக்கள் அவதியடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள அண்ணாமலை, சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களைக் கணக்கெடுத்து, உடனடியாக சாலை வசதி ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.