சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உட்பட எட்டுப்பட்டி மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக கிச்சுப்பாளையத்தில் இருந்து பூக்கள் மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் கோட்டை மாரியம்மனுக்குச் சாத்தப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய 2 டன் பூக்களைக் கொண்டு அம்மனுக்குப் பூச்சாட்டுதல் நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர். இதைத் தொடர்ந்து அன்னதானப்பட்டி மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், குகை காளியம்மன் மாரியம்மன், சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன், அம்மாபேட்டை பலபட்டறை மாரியம்மன் உட்பட எட்டுப்பட்டி மாரியம்மன் கோயில்களிலும் பூச்சாட்டுதலுடன் ஆடித் திருவிழா தொடங்கியது.