புதிய உடல் பருமன் எதிர்ப்பு மருந்துகளுக்கான மிகப்பெரிய சந்தையாகவும், அவற்றுக்கான மலிவு விலை GENERIC மருந்துகள் உற்பத்தித் தளமாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது. பிரபலமான உடல் எடை இழப்பு மருந்துகளின் காப்புரிமை காலாவதியாகும் நிலையில், மருந்து துறையில் தன்னிறைவு பெற்ற சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா உருவாக்குகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் கிட்டத்தட்ட 44 கோடி மக்கள் உடல் பருமனாக இருக்கலாம் என்ற ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி, எடையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைக் கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்த எண்ணிக்கையை “மிகப்பெரியது மற்றும் பயங்கரமானது” என்று விவரித்த பிரதமர் மோடி, உடல் பருமன் மற்ற நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பதால், தினசரி சமையல் எண்ணெய் பயன்பாட்டில் 10 சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்கு முன்னதாக, கடந்த பிப்ரவரியில், தனது மனதின் குரல் வானொலி உரையில், நாட்டில் அதிகரித்து வரும் குழந்தைகளின் உடல் பருமன் விகிதங்கள் குறித்து எச்சரித்த பிரதமர் மோடி, தங்கள் உணவில் சிறிய வாழ்க்கை முறைக்கேற்ற மாற்றங்களை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்திருந்தார்.
கடந்த ஆண்டு, அதிக எடை கொண்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிக்கு மேல் ஆசியாவில் வசித்து வருவதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. 2050ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று கூறப் படுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 24 சதவீத பெண்களும் 23 சதவீத ஆண்களும் அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர்.
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் வயதானவர்களின் சுமார் 9 கோடி இந்தியர்கள் நீரிழிவு நோய் அபாயத்தில் உள்ளதாகவும், இன்னும் 25 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 19 கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
அதிகரித்து வரும் இந்த நோய் சுமை, இந்திய மருந்து சந்தையை மறுவடிவமைத்துள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரப் படி, இந்தியாவின் உடல் பருமன் எதிர்ப்பு மருந்து சந்தை 628 கோடி ரூபாயாகும். இது கடந்த 5 ஆண்டுகளில், ஐந்து மடங்கு அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
(semaglutide) செமக்ளூட்டைட் மற்றும் (tirzepatide) டிர்செபடைட் போன்ற GLP-1 மருந்துகளே மொத்த சந்தை மதிப்பில் 75 சதவீதமாகும். மேலும், GLP-1 மருந்துகளுக்கான உலகளாவிய சந்தை அடுத்த ஆறு ஆண்டுகளில் மூன்று மடங்குக்கும் அதிகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க நிறுவனமான Eli Lilly எலி லில்லி,கடந்த மார்ச் மாதம், இந்தியாவில், தனது உடல் பருமன் எதிர்ப்பு மருந்தான Mounjaro மௌஞ்சாரோவை அறிமுகப்படுத்தியது. அறிமுகமான முதல் மூன்று மாதங்களில் 24 கோடி ரூபாய்க்கு மருந்து விற்பனை ஆகியுள்ளது. ஆச்சரியப் படும் வகையில், கடந்த ஜூன் மாதம் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.
ஒரு வாரத்துக்கான மருந்தின் அளவைப் பொறுத்து ஒரு மாதத்துக்கு 17,500 ரூபாய் என்ற கணக்கில், ஆறு மாத சிகிச்சைக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதனையடுத்து, டென்மார்க்கை சேர்ந்த (Novo Nordisk) நோவோ நோர்டிஸ்க் நிறுவனம், தனது உடல் பருமன் எதிர்ப்பு மருந்தான ( Wegovy ) வெகோவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மௌஞ்சாரோவை போலவே வெகோவியின் விளையும், ஒரே மாதிரியாக உள்ளன. இந்தியாவில் ஒரு காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் ஒரு மருந்துக்கு ஒரு மாதத்துக்கு 18000 ரூபாய் என்பது இப்போது சர்வ சாதாரணமாகி உள்ளது. இது, தனிநபர் வருமானம் அதிகரித்த நிலையில், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர், உடல் ஆரோக்கியத்துக்குக் கொடுக்கும் முன்னுரிமையைக் காட்டுகிறது.
(Novo Nordisk) நோவோ நோர்டிஸ்கின் (Ozempic) ஓசெம்பிக் மற்றும் ( Wegovy ) வெகோவியில் உள்ள மூலப்பொருளான (semaglutide) செமக்ளூடைடுக்கான முக்கிய காப்புரிமை, அடுத்த ஆண்டு இந்தியா உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் காலாவதியாகிறது.
இந்தச்சூழலில், Dr. Reddy’s, Biocon, Sun Pharma, Cipla, Lupin, OneSource Specialty Pharma, Zydus Lifesciences Divi’s Laboratories மற்றும் Aurobindo Pharma, போன்ற இந்திய மருந்து நிறுவனங்கள், உடல் எடை குறைப்புக்கான ஜெனரிக் வகை மருந்துகளைத் தயாரித்து வருகின்றன. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த ஜெனரிக் மருந்துகளின் விலைகள் 90 சதவீதம் மலிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ஜெனரிக் மருந்து உற்பத்தியாளர்களில் முன்னணியில் இந்தியா உள்ளது. உலகளாவிய தேவையில் கிட்டத்தட்ட 20 சதவீத ஜெனரிக் மருந்துகளை இந்தியா வழங்குகிறது. சுயசார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக மருந்துத் துறையில் தன்னிறைவை அடைவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.
மத்திய அரசின், உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம்,14 துறைகளில் 1.97 லட்சம் கோடி ரூபாய் செலவில், முக்கிய தொடக்கப் பொருட்கள், மருந்து இடைநிலைகள் மற்றும் செயலில் உள்ள மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சிக்கலான மருந்துகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 38 முக்கியமான செயலில் உள்ள மருந்து பொருட்களின் உள்நாட்டு உற்பத்தி தொடங்கப் பட்டது. இதற்கிடையே, Dr. Reddy’s மற்றும் OneSource Specialty Pharma ஆகிய நிறுவனங்களின் உடல் எடை குறைப்புக்கான ஜெனரிக் மருந்துகளின் உள்நாட்டு விற்பனைக்குத் தடை கோரி, டென்மார்க்கின் Novo Nordisk நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நோக்கி நாடு தழுவிய இயக்கத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா, எடை மேலாண்மைத் துறையில், புதிய சாதனையைப் படைக்கும் என்று கூறப்படுகிறது.