சட்டவிரோத சிறுநீரக விற்பனை குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இரு வேறு மருத்துவமனைகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து சிறுநீரகத்தை பெற்று முறைகேடாக விற்பனை செய்த சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் தலைமையில், 4 பேர் கொண்ட தனிக்குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தனிக்குழு நடத்திய விசாரணையில் சில மருத்துவமனைகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அங்கீகார சான்றிதழ்களை போலியாக சமர்பித்தது அம்பலமானது.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்சி சிதார் மருத்துவமனை ஆகியவை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.