பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் வரை நடைபெற்று வந்த 2ம் கட்ட சுரங்கப்பாதை பணி நிறைவடைந்ததாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
பூவிருந்தவல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை 26 புள்ளி 8 கிலோ மீட்டர் தூரத்திற்கும், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் வரை 10 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.
இதற்கிடையே, சென்னை பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் வரை சுரங்கம் தோண்டும் பணியானது கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது.
கடந்த ஓராண்டாக மும்முரமாக பணிகள் நடைபெற்ற நிலையில், இந்த வழித்தடத்தில் இரண்டாயிரத்து 47 மீட்டர் நீளத்திற்கு தற்போது சுரங்கப் பணி நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பனகல் பார்க் – கோடம்பாக்கம் வரையிலான சுரங்கப்பாதை மிகவும் நீளமான வழித்தடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சுரங்கப்பாதை பணி நிறைவு பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.