கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், தனது காரை விற்பனை செய்வதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த கும்பகோணம் சென்னியமங்கலத்தை சேர்ந்த வீரசெல்வம் என்பவர் கார் குறித்து விசாரித்துள்ளார். மேலும், வால்பாறை வரையெல்லாம் வர முடியாது, வேண்டுமானால் காரை எடுத்துகொண்டு கும்பகோணம் வாருங்கள், அதற்கான பணத்தை நான் தறுகிறேன் என கூறியுள்ளார்.
அதனை நம்பிய சக்திவேல் , வால்பாறையில் இருந்து கும்பகோணத்திற்கு காரை எடுத்து சென்றுள்ளார். சாக்கோட்டை பகுதியில் சக்திவேலை சந்தித்த வீரசெல்வம், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்கிகொள்வதாக கூறியுள்ளார். வழக்கம்போல இதையும் நம்பிய சக்திவேல் அதற்கு சம்மதித்துள்ளார்.
இதனையடுத்து, ஓட்டி பார்ப்பதற்காக காரை எடுத்து சென்ற வீரசெல்வம் கடைசி வரை திரும்பி வரவில்லை. இது குறித்து சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில், காரை திருடி சென்ற வீரசெல்வத்தை போலீசார் கைது செய்தனர்.