சோழமன்னர்களின் தலைசிறந்த மன்னராகத் திகழ்ந்த பேரரசர் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழா நடப்பாண்டில் கொண்டாடப்படுகிறது. சோழர்களின் கட்டட கலைக்கு உதாரணமாகத் திகழும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் குறித்தும் அதில் அடங்கியிருக்கும் வரலாறுகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பாண்டியர்களின் படையெடுப்பு, ஆங்கிலேயர் படைகளின் அட்டூழியம் ஆகியவற்றிற்கு மத்தியில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த உன்னதமான தலைநகர் கங்கை கொண்ட சோழபுரம் அங்கே இருந்ததற்கான அடையாளமாக வரலாற்றைச் சுமந்து நிற்கிறது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்.
கங்கை கொண்ட சோழபுரம் கோயில், ராஜேந்திர சோழனால் கட்டப்படும் போதும் எத்தகைய பிரம்மிப்புடன் காணப்பட்டதோ அதில் துளியளவும் குறைவில்லாமல் இன்றளவும் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. தஞ்சை பெரிய கோயில் அமைப்பில் இக்கோயில் கட்டப்பட்டாலும் பல்வேறு வகையிலும் மாறுபட்டதாகவும் காணப்படுகிறது
கிழக்கு நுழைவு வாயிலில் நுழைந்தவுடன் நம் கண்களுக்குத் தென்படும் நந்தி பகவான், பிரம்மாண்டமான மூல மூர்த்திகள், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள் ஆகியவை இது வெறும் கோவில் அல்ல வரலாற்றுக் காவியம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.
60 அடி சுற்றளவில் 13.5 அடி உயரத்தில் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த சிவலிங்கம் தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கமாக அமைந்துள்ளது. மாமன்னர் ராஜராஜன் சோழனும், ராஜேந்திர சோழனும் சிவபெருமான் மீது கொண்டிருந்த தீராத அன்பே இத்தகைய பிரம்மாண்ட கோயில் கட்டப்படுவதற்கான அடிப்படை காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்
கோயிலின் பக்கவாட்டு சுவர்களில் கலைநயமிக்க விநாயகர், நடராஜர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தென்புற நுழைவாயிலில் காணப்படும் ராஜேந்திர சோழனின் அற்புதமான சிலை காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. பெரும்படையையும், எதிரிகளையும் புறமுதுகிட்டு ஓடச்செய்து பல நாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்திருந்தாலும் எளிமையுடனே வாழ்ந்த ராஜேந்திர சோழனின் வாழ்க்கையையே அந்த சிலையும் உணர்த்துகிறது.
சாளுக்கிய மன்னர்களை வெற்றிபெற்ற பின் ராஜேந்திர சோழன் கட்டிய துர்க்கை அம்மன் கோயில் இன்றளவும் கட்டடக் கலையில் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக இடம்பெற்றிருக்கும் இந்த கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்து வரலாற்றை ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.
சோழ மன்னர்களின் வரலாற்றில் சுமார் 250 ஆண்டுகள் சீரோடும், சிறப்போடும் பரபரப்பான தலைநகரமாக இயங்கிய கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது.