நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 3 நாட்களில் 25 கோடியே 28 லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகியது தெரியவந்துள்ளது.
கடந்த 3 நாட்களாகப் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள், ஆப்ரேஷன் சிந்தூர் ஆகியவை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கினர்.
கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த பவன் பன்சால், ஒரு கூட்டத்தொடரை நடத்துவதற்கான செலவு நிமிடத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாய் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மக்களவையில் ஆயிரத்து 26 நிமிடங்களும், மாநிலங்களவையில் 816 நிமிடங்களும் வீணடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 3 நாட்களில் எதிர்க்கட்சியின் அமளியால் 25 கோடியே 28 லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளது தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் அமளியால் மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா, வரி விதிப்புச் சட்டங்கள் திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாததுடன் மக்கள் பணமும் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.