நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்தவிடாமல் முடக்கி வரும் எதிர்க்கட்சிகளால், 2 நாளில் மட்டும் 25 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரை நடத்த ஒரு நிமிடத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலும் செலவாகும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21ம் தேதி தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியாலும், கூச்சல், குழப்பத்தாலும் இருஅவைகளும் அடுத்தடுத்து முடங்கி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம் உள்ளிட்டவை குறித்து உடனே விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.
இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, உரிய நேரத்தில் விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என்று கூறியது… அதன்படி 29ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடத்தவும் ஒப்புதல் வழங்கியது. ஆனால் இதனை ஏற்காத எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவது அவை நடவடிக்கைகளைப் பாதிப்பதோடு, நாடாளுமன்றம் நடைபெறுவதற்கான நோக்கத்தையே சிதைக்கிறது. அதுமட்டுமின்றி மக்கள் வரிப்பணத்தையும் வீணாக்கி வருகிறது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்த நிமிடத்திற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவிடப்படும் நிலையில், அவை நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டதால், 2 நாட்களில் மட்டும் 25 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்களவையும், மாநிலங்களவையும் நாள் ஒன்றுக்கு தலா ஆறு மணி நேரம் நடத்தப்படுவதாகக் கணக்கிட்டால், மூன்று நாட்களுக்கு 18 மணி நேரம் அல்லது ஆயிரத்து 80 நிமிடங்கள் நடந்திருக்க வேண்டும். ஆனால், மாநிலங்களவை 3 நாட்களில் மொத்தமே 264 நிமிடங்கள் தான் நடந்திருக்கிறது. மக்களவையோ ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக மொத்தமே 54 நிமிடங்கள் மட்டும்தான் நடைபெற்றிருப்பது பொதுவெளியில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
மக்களின் நம்பிக்கை, விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்படாத எம்.பி.,க்கள், தெருமுனையில் போராட்டம் நடத்துவதைப் போன்று செயல்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா கவலை தெரிவித்திருந்தார். ஒருபுறம் விவாதம், மறுபுறம் அமளி என இரட்டை நிலைப்பாடு கொண்ட எதிர்க்கட்சிகள்,நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடித்து வருவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அண்மையில் கண்டித்திருந்தார்.
எதிர்க்கட்சிகளின் இதுபோன்ற செயலால் மக்கள் வரிப் பணம் வீணாகிறது. அவர்களை நம்பி வாக்களித்த சாதாரண மக்களுக்கு எந்தவித பலனும் சென்று சேராமல் போய்விடுகிறது. மக்கள் நலனைப் புறந்தள்ளாமல் ஆக்கப்பூர்வமான விவாதத்தில் பங்கேற்று, மக்களின் குரலாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒலிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.