நாமக்கல்லில் சிறுநீரக திருட்டு வழக்கில் தொடர்புடைய தனலட்சுமி சீனிவாசன் மற்றும் சிதார் மருத்துவமனைகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி சொற்ப விலைக்குத் திருடப்பட்ட சிறுநீரகங்கள் செல்வந்தர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள குமாரப்பாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகள் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் பகுதியாகும். இந்த பகுதிகளிலிருந்து மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வறுமை, போதுமான வேலைவாய்ப்பின்றி தவித்துவரும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து, அவர்களின் சிறுநீரகத்தைத் திருடி விற்பனை செய்யும் சம்பவம் தற்போது பூதாகரமாகியுள்ளது.
விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை தருகிறோம் என வாக்குறுதியளித்து தங்களின் வேலை முடிந்த பின்பு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் மட்டுமே தந்திருப்பதும் வெளிவந்துள்ளது.
இதுவரை சுமார் 100க்கும் அதிகமான விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னி திருடப்பட்டதில் திமுக நிர்வாகி ஆனந்தன் என்பவர் தான் இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
வருமானமின்றி தவித்துவரும் விசைத்தறி தொழிலாளர்களை, குறிப்பாகப் பெண்களின் சிறுநீரகம் தான் அதிகளவு திருடப்பட்டுள்ளது. கந்து வட்டிக்குக் கடன் வாங்கி அதனைச் செலுத்த முடியாத தொழிலாளர்களை அழைத்துப் பேசி, லட்சக்கணக்கில் பணம் தருகிறோம் என ஆசை காட்டி அவர்களின் கிட்னியை திருடியதில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மற்றும் திருச்சி சிதார் ஆகிய இரண்டு மருத்துவமனைகள் தான் பெரும்பங்கு வகித்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை திமுக மண்ணச்சநல்லூர் எம் எல் ஏ கதிரவனுக்கு சொந்தமானது என்பதால் அவருக்கும் இதில் தொடர்பிருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உடல் உறுப்புகள் திருட்டு என்பது உலகாளவிய பெரும் குற்றமாகக் கருதப்படும் நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான மருத்துவமனையிலேயே நடைபெற்றிருக்கும் அத்தகைய திருட்டு சம்பவங்கள் நடைபெற்றிருப்பது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. ஏழை, எளிய மக்களிடம் இருந்து சொற்பத் தொகைக்குத் திருடப்படும் சிறுநீரகங்கள், பல கோடி ரூபாய் கூட தர முன்வரும் செல்வந்தர்களுக்குப் பொருத்தப்படுவதாகவும், அதன் மூலம் கோடிக்கணக்கான பணப்புழக்கம் நடைபெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரு மருத்துவமனைகள் மட்டுமன்றி ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிறுநீரகங்கள் திருடப்பட்டு, வெளிநாட்டினருக்குப் பொருத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏழை, எளிய மக்களிடம் இருந்து சட்டவிரோதமாகத் திருடப்பட்ட சிறுநீரகங்கள் யார் யாருக்குப் பொருத்தப்பட்டுள்ளது? எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது? உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான விதிமுறைகளை மீறித் தான் பொருத்தப்பட்டதா? என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தனலட்சுமி சீனிவாசன் மற்றும் சிதார் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் விசாரணையை முடித்துவிடாமல் சிறுநீரக திருட்டு வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.