தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செய்தி எதிரொலியாக ஓசூரில் கழிப்பறையில் ரேசன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 31 வது வார்டுக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள 14 ஆம் எண் கொண்ட ரேசன் கடை கட்டடம் பழுதாகி உள்ளது.
இதனால் தற்காலிகமாக ஓசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள உழவர்சந்தை அருகே மலர் வணிக வளாகத்திற்கு ரேஷன் கடை இடம் மாற்றம் செய்யப்பட்டுக் கடந்த 3 மாதங்களாக பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் ரேசன் கடைக்கு லாரியில் வந்த அரிசி மூட்டைகள் அருகே உள்ள கழிப்பறையில் இருப்பு வைக்கப்பட்டது.
இதனைப் பார்த்த பொதுமக்கள் ரேசன் கடை விற்பனையாளர் முத்துமாதேவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் விற்பனையாளர் கழிப்பறையைப் பூட்டிவிட்டுச் சென்றார்.
இது குறித்து நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதையடுத்து, முத்துமாதேவனை பணிஇடை நீக்கம் செய்து இணை பதிவாளர் நட்ராஜ் உத்திரவிட்டுள்ளார். மேலும் கழிப்பறையில் வைத்திருந்த 30 மூட்டை ரேசன் அரிசியும் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது.