திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்னையில் மாற்றுத்திறனாளி இளைஞர் மீது ஜல்லிக்கற்களை கொட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொண்ட சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பார்த்திபன் என்பவர், தனது வீட்டின் அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தை கடந்த சில ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறார்.
அந்த இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன், ஜெய்சங்கர் ஆகியோர் அபகரிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதற்காக இருவரும் ஜல்லிக்கற்களை லாரிகளில் கொண்டு வந்துள்ளனர்.
அப்போது, தரையில் அமர்ந்திருந்த பார்த்திப்பன் தடுக்க முற்பட்டபோது அவர் மீது ஜல்லிக்கற்களை கொட்டியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பார்த்திபனை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.