கேரள மாநிலத்தில் பலாப்பழம் சாப்பிட்டதை மது அருந்தியதாக ஆல்கஹால் இயந்திரம் காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்குத் தினந்தோறும் காலையில் ஆல்கஹால் பரிசோதனை நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் பத்தனம் திட்டாவில் 3 ஓட்டுநர்களுக்கு ஆல்கஹால் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 3 ஓட்டுநர்களுக்கும் இரத்த ஆல்கஹால் அளவு வரம்பை விட அதிகமாக இருப்பதாக காட்டியது. ஆனால் அவர்கள் மூன்று பேரும் ஒரு துளிகூட மது அருந்தவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், நன்கு பழுத்த பலாப்பழத்தைச் சாப்பிட்டது தெரியவந்தது. நொதித்தல் திறன் கொண்ட நன்கு பழுத்த பலாப்பழத்தைச் சாப்பிட்டதாலே இரத்த ஆல்கஹால் அளவு அதிகமாகக் காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்த அந்த பலாப்பழத்தை மேலும் ஒரு ஓட்டுநரை உட்கொள்ள கூறி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த ஓட்டுநரின் உடலிலும் ஆல்கஹால் அளவு அதிகரித்துள்ளதாகக் கருவி காட்டியது.
இதையடுத்து மூன்று ஓட்டுநர்களும் பேருந்தை இயக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இந்த சம்பவத்திற்குப் பிறகு வாழ்க்கையில் பலாப்பழமே சாப்பிட மாட்டேன் என மூன்று ஓட்டுநர்களும் கூறியது வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.