கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தவெகவில் உறுப்பினர் சேர்க்கைக்காகச் சென்ற நிர்வாகிகளும், பாமகவினரும் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருதரப்பினரும் உருட்டுக் கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது சமாதானம் செய்ய முயன்ற காவல்துறையையும் கதிகலங்கச் செய்தது.
அன்னை சத்யா தெருவைச் சேர்ந்த தவெக நிர்வாகி விஜய் செல்வாவுக்கும், பாமக நிர்வாகியான பாலாஜி என்பவருக்கும் நிலப் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தவெக உறுப்பினர் சேர்க்கைக்காக விஜய் செல்வா தலைமையில் அக்கட்சியினர் அன்னை சத்யா தெருவிற்குச் சென்றுள்ளனர்.
பாலாஜியின் வீட்டின் முன் சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்குச் சென்ற போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் காவல்துறையைக் கண்டு கொள்ளாத அவர்கள், உருட்டுக் கட்டைகளால் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.
நீண்ட நேரம் போராடி அவர்களைச் சமாதானம் செய்த போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.