நடப்பனஹள்ளி கருப்பசாமி கோயிலில், மிளகாய் யாகமும், பூசாரிக்கு மிளகாய் தூள் கரைசலால் அபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் நடப்பனஹள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பெரிய கருப்புசாமி கோயிலில், ஆடி மாத அமாவாசையையொட்டி, மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ஆடு, கோழி, மதுபானம், சுருட்டு, மிளகாய் உள்ளிட்டவற்றை நேர்த்திக்கடனாகச் செலுத்தி சுவாமியை வழிபட்டனர்.
தொடர்ந்து, கோயில் முன்பாக தீ மூட்டி, மிளகாயைத் தீயில் போட்டு, மிளகாய் யாகம் நடைபெற்றது. பின்னர், பெரிய அண்டாக்களில் வைக்கப்பட்டிருந்த 108 கிலோ மிளகாய் தூள் கரைசலைக் கோயில் பூசாரி மீது ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அசைவ உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது.