தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. கடந்த மே மாதம் எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்து கம்போடியா வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனால் இருநாடுகளின் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு தாய்லாந்திலிருந்து காய்கறி மற்றும் பழங்கள் இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது. அதேபோல் தாய்லாந்து திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை ஒளிபரப்பவும் கம்போடியா தடை விதித்தது.
அதற்குப் பதிலடியாக கம்போடியா உடனான எல்லையைத் தாய்லாந்து மூடியது. இந்நிலையில் எல்லைப் பிரச்சனை காரணமாக மீண்டும் தாய்லாந்து – கம்போடியா இடையே மோதல் வெடித்துள்ளது. இருநாட்டு ராணுவ வீரர்களும் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர்களைப் பயன்படுத்தி கடும் மோதலில் ஈடுபட்டனர்.
இதில் இருதரப்பைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் படுகாயமடைந்தனர். இதனிடையே கம்போடியா ராணுவ நிலைகள் மீது எஃப்16 விமானங்களைப் பயன்படுத்தி தாய்லாந்து தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.