இந்தியாவிற்கு எதிரான போரில் தோல்வியடைந்த பிறகு முதல்முறையாகச் சீனாவிற்குச் சென்ற பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் ஜெனரல் அசிம் முனீர், தர்மசங்கடமான நிலையைச் சந்தித்துள்ளார். சிறந்த வரவேற்பையும் பாராட்டையும் எதிர்பார்த்துச் சென்ற அசிம் முனீருக்கு ஏற்பட்ட அவமானத்திற்குக் காரணம் என்ன? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனா- பாகிஸ்தான் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் விதமாகச் சீனா சென்றுள்ள பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் ஜெனரல் அசிம் முனீர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான பாகிஸ்தானின் முயற்சிகளுக்குச் சீனா தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா, இருநாடுகளுக்கும் இடையிலான நட்பை ஆதரிப்பதில் சீன இராணுவம் உறுதியாக இருப்பதாக வாங் யி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு ஒரு செய்தியைச் சொல்லும் வகையில், சீனா பாகிஸ்தானுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்பதையும் வாங் யி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இரு நாடுகளையும் “இரும்பு சகோதரர்கள்” என்று குறிப்பிட்ட அசிம் முனீர், இந்தியாவுக்கு எதிரான போரில் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கிய சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனாலும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த பேச்சுவார்த்தையில், பாகிஸ்தான் மீதான தனது கடும் அதிருப்தியைச் சீனா வெளிக்காட்டியுள்ளது. சீனாவின் கனவு திட்டமான பட்டுப்பாதை திட்டத்தின் பகுதியான பொருளாதார வழித் தடம் கட்டமைப்புக்குப் பாகிஸ்தானால் பாதுகாப்பு உத்தரவாதம் தர முடியாவிட்டால், சீனா எப்படி ஒத்துழைப்பு தரமுடியும் ? என்று கேள்வியை முன்வைத்துள்ளார் வாங் யி.
பாகிஸ்தான் மற்றும் மத்திய மற்றும் தெற்காசியா முழுவதும் தனது வர்த்தக தொடர்புகள் மற்றும் செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் 2015ம் ஆண்டில், சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் திட்டத்தைச் சீனா செயல்படுத்தத் தொடங்கியது.
சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தைப் பாகிஸ்தான் வழியாகக் கடலுடன் இணைப்பதே இதன் நோக்கமாகும். இந்த திட்டத்துக்காக, சீனா 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீட்டைச் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் மையப் பகுதியாக இருக்கும் பலுசிஸ்தான் மாகாண மக்கள், இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். சீனாவின் திட்டங்கள், தெற்கு துறைமுக நகரமான கராச்சி உட்பட நாட்டின் பிற பகுதிகளிலும், பலூச் போராளிகளால் பல ஆண்டுகளாகக் குறிவைக்கப்பட்டு வருகின்றன.
2018 ஆம் ஆண்டில், பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) கராச்சியில் உள்ள சீன தூதரகத்தைத் தாக்கியது. 2021ல் பாகிஸ்தானில் சீனத் தூதர் தங்கியிருந்த உணவகத்துக்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு,கராச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே நடந்த ஒரு பெரிய குண்டுவெடிப்பில் இரண்டு சீனர்கள் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து, சீனாவின் திட்டங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்குப் பழிவாங்கும் விதமாகப் பாகிஸ்தான் இராணுவத்தைக் குறிவைத்து பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் தாக்குதல்களைத் தீவிரப் படுத்தியுள்ளது. இதுவரை 9 சீன பொறியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்துக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பெரும் தடையாக இருப்பதாகச் சீனா கூறுகிறது. ஏற்கெனவே தங்கத்தை விட `நம்பிக்கை’ மிகவும் மதிப்புமிக்கது என்றும், பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் சீன மூலதன முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அசைக்கும் வகையில் பாதுகாப்புச் சூழல் உள்ளது என்றும் சீன அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இது ஒரு வர்த்தக பாதை மட்டுமல்ல, சீனாவின் உலகளாவிய லட்சியங்களின் தூண் என்பதை நினைவூட்டிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, சீனா இதற்காகச் செய்துள்ள முதலீடுகள் ஆபத்தில் உள்ளதாகவும் அசிம் முனீரிடம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் இந்த வார்த்தைகள் வெறும் ஏமாற்றத்தில் வந்தவை அல்ல .பாகிஸ்தானுக்கான எச்சரிக்கை என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள சீன குடிமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித் தடம் திட்டத்தை எதிர்க்கும் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தை ஒடுக்குவதாகவும், அசிம் முனீர் உறுதியளித்துள்ளார்.