இந்தியாவில் வீட்டின் கூரை மேல் அமைக்கப்படும் சூரிய மின்தகடுகளுக்கான இன்வெர்டர்களில் 80 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பதால் சைபர் தாக்குதல்களிலிருந்து அவற்றைப் பாதுகாக்கவும், தரவுகளை அயல்நாடுகள் திருடுவதைத் தடுக்கவும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகம் முழுவதும் சூரிய மின்கலங்கள் மற்றும் காற்றாலைகளை மின்சார கட்டமைப்புகளுடன் இணைப்பதற்கு இன்வெர்ட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய இன்வெர்ட்டர் சப்ளையர் நிறுவனமாகச் சீனாவின் Huawei உள்ளது.
2022 ஆம் ஆண்டில் உலக அளவிலான ஏற்றுமதியில் Huawei நிறுவனத்தின் பங்கு 29 சதவீதமாகும். இதற்கு அடுத்த படியாக, சீனாவின் Sungrow மற்றும் Ginlong Solis ஆகிய நிறுவனங்கள் அதிகமான இன்வெர்ட்டர்களை ஏற்றுமதி செய்கின்றன.
ஜெர்மன் சூரிய சக்தி உற்பத்தியாளரான 1Komma5, பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக, Huawei இன்வெர்ட்டர்களைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளது. சீன இன்வெர்ட்டர்களில், தயாரிப்பு ஆவணங்களில் பட்டியலிடப்படாத போலி தகவல் தொடர்புச் சாதனங்கள் இருந்தது அமெரிக்க நிபுணர்களால் கண்டுபிடிக்கப் பட்டன. தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு முதல், தேசிய பாதுகாப்புக்கு முரணான செயல்பாடுகளை Huawei நிறுவனம் செய்வதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, அந்நிறுவனத்துக்குத் தடை விதித்தது.
அமெரிக்க இன்வெர்ட்டர் சந்தையை விட்டு வெளியேறினாலும், Huawei மற்றநாடுகளில் இன்னும் ஒரு ஆதிக்கம் செலுத்தும் சப்ளையராகவே உள்ளது. ஐரோப்பிய சூரிய சக்தி உற்பத்தி கவுன்சில், 200 GW-க்கும் அதிகமான ஐரோப்பிய சூரிய சக்தி திறன், சீனாவில் தயாரிக்கப்பட்ட இன்வெர்ட்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
இது 200 க்கும் மேற்பட்ட அணு மின் நிலையங்களுக்குச் சமம் என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த நவம்பர் மாதத்தில், ஐரோப்பிய நாடான லிதுவேனியா,100 கிலோவாட்டுக்கு மேல் உள்ள சீன சூரிய, காற்றாலை மற்றும் பேட்டரி இன்வெர்ட்டர்களுக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இயற்றியது. சீனாவின் சட்டப்படி, சீன நிறுவனங்கள், அந்நாட்டின் உளவுத்துறை அமைப்புகளுக்குக் கட்டாயம் ஒத்துழைக்க வேண்டும்.
இது வெளிநாட்டு மின் கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்ட சீன இன்வெர்ட்டர்கள் மீது சீன ராணுவத்துக்கு அதிகமான கட்டுப்பாட்டை வழங்குகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 80 சதவீதத்துக்கும் அதிகமான கூரை சூரிய மின் இன்வெர்ட்டர்கள் சீனாவில் தயாரிக்கப்படுகிறது.
கூரை சூரிய மின்சக்தி போன்ற எரிசக்தி வளங்கள் அதிகமாகப் பரவி வருவதால், மின் இணைப்புகளை இணைப்புகளை நிர்வகிக்கும் ஸ்மார்ட் இன்வெர்ட்டர்களின் தேவை அதிகரித்துள்ளன. இந்த ஸ்மார்ட் இன்வெர்ட்டர்கள், நேரடி மின்னோட்டத்தை, மின் சாதனங்களுக்குத் தேவையான மாற்று மின்னோட்டமாக மாற்றுகின்றன.
ஆற்றல் சேமிப்புக்கு உதவும் ஸ்மார்ட் இன்வெர்ட்டர்கள், ரிமோட் மூலம், தொலை கண்காணிப்புக்கும் உதவுகின்றன. உள்நாட்டு சூரிய மின் உற்பத்தி வளர்ச்சியைத் தடுக்க, ஹேக்கர்கள் ஸ்மார்ட் இன்வெர்ட்டர் சாதனங்களைக் குறிவைக்கின்றனர். அதனால், பரவலான மின் அமைப்புத் தோல்விகளை ஒரு நாட்டில் ஏற்படுத்தி விட முடியும். நாட்டுக்கு வெளியே உள்ள (SERVER ) சேவையகங்களுக்குத் தரவுகளை அனுப்பும் இன்வெர்ட்டர்கள், தேசிய எரிசக்தி இறையாண்மையை அச்சுறுத்துகின்றன.
எனவே, கூரை சூரிய மின்சக்தி கண்காணிப்பு அமைப்புகளுக்கான சைபர் பாதுகாப்பு விதிகளை மத்திய புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. பிரதம மந்திரி சூரிய கர் Muft Bijli Yojana திட்டத்தின் கீழ் இன்வெர்ட்டர்களை வழங்கும் அனைத்து அசல் உபகரண உற்பத்தியாளர்களும் தங்கள் இன்வெர்ட்டர்களை நேரடியாகத் தேசிய சேவையகங்களில் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைச்சகதால் நிர்வகிக்கப்படும் மென்பொருளுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அணையிட்டுள்ளது.
மேலும், dongles and data loggers உள்ளிட்ட அனைத்து இன்வெர்ட்டர் தொடர்பு சாதனங்களும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான தரவு பரிமாற்றத்துக்காக machine-to-machine (M2M) சிம் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் மின்சக்தி GRID கிரிட் நிலைத்தன்மை மற்றும் சைபர் பாதுகாப்புகாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தேசிய போர்டல் மூலம் கூரை சூரிய அமைப்பு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தரவுத் தொடர்பு மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் இன்வெர்ட்டர் தொடர்பு சாதனங்களின் ஒருங்கிணைப்பு சோதனைக்குக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 30 GW ஒட்டுமொத்த திறன் கொண்ட இருபது லட்சம் கூரை சூரிய மின்சக்தி கொண்ட வீடுகள் இந்தியாவில் உள்ளன.
2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி கூரை சூரிய அமைப்புகளை நிறுவுவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை மேம்படுத்துவதற்காக, உள்நாட்டு சூரிய மின் உற்பத்தி மற்றும் சைபர் பாதுகாப்பு உள்கட்டமைப்புடன் இந்தியா முன்னேறி வருகிறது.