காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைதான பெண்ணின் தந்தை உட்பட 3 பேரின் ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ என காட்டமாகத் தெரிவித்துள்ளது.
திருவள்ளூரில் காதல் திருமணம் விவகாரத்தில் சிறுவனைக் கடத்தியதாக எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உட்பட 5 பேரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் வழங்க உத்தரவிடக் கோரி பெண்ணின் தந்தை வனராஜ், மணிகண்டன், கணேசன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கியமானவர்கள் இன்னும் கைது செய்யப்படாததால், மனுதாரர்களுக்கு ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்ற காவல்துறை வாதத்தை ஏற்று, மூவரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள போதும், வழக்கில் காவல்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கைகளைப் பார்க்கும்போது, விசாரணையில் போதுமான முன்னேற்றம் இல்லை என்று தெரிவித்த நீதிபதி, அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம் என குறிப்பிட்டார்.
இந்த வழக்கைப் பார்க்கும் போது, நாடு போலீஸ் ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டிற்கு செல்கிறதோ என்று அச்சம் கொள்ள வைப்பதாகத் தெரிவித்த நீதிபதி, மக்கள் காவல்துறை மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காக்கும் வகையில், இனி நடைபெறும் விசாரணையில் போலீசாரின் செயல்பாடுகள் இருக்கும் என நம்புவதாக நீதிபதி கூறியுள்ளார்.