திருப்பூரில் கர்ப்பிணிக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கிய தாய் சேய் நல மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் முனியப்பன் – வான்மதி தம்பதியர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தையுள்ள நிலையில் வான்மதி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். இந்நிலையில், வான்மதி தனது கணவருடன் அவிநாசி சாலையில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார்.
அப்போது வான்மதிக்கு ஸ்கேன் எடுக்க நீர்ச்சத்து குறைவாக இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், ஓ.ஆர்.எஸ் பவுடரை கொடுத்துக் குடிக்கச் சொல்லிவிட்டு ஒரு மணிநேரத்திற்கு பின் வருமாறு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து ஓ.ஆர்.எஸ் பவுடர் நிறம் மாறி இருப்பதை கண்டறிந்த வான்மதி, அதன் காலாவதி தேதியைச் சரிபார்த்தபோது, ஓ.ஆர்.எஸ் பவுடர் இரண்டு மாதங்களுக்கு முன் காலாவதி ஆகியிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாகக் கேள்வி எழுப்பியபோது மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி தங்கள் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடரை கர்ப்பிணிக்கு வழங்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.