இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக மாலத்தீவுகளுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலத் தீவுகளுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாகச் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு ஆரத்தழுவி வரவேற்றார்.
தொடர்ந்து விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் மூலம் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலியில் உள்ள குடியரசு சதுக்கம் சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும், அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பும் அளிக்கப்பட்டது. அப்போது சதுக்கத்தில் இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
பின்னர் அங்குக் கூடியிருந்த இந்தியா மற்றும் மாலத்தீவுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
தொடர்ந்து மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சுவை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவருடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில், ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.