அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் உள்ள சக்கரை குளத்தில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டுச் செல்வதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், கோயில் ராஜ கோபுரம் முன்பாக உள்ள 16 கால் மண்டப நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டுள்ளதால், அங்கு இரவு நேரத்தில் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கப்படுவதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் ராஜகோபுரம் எதிரே உள்ள சர்க்கரை குளத்தின் சுற்றுப்பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு பாட்டில்களைப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும், பராமரிப்பு இன்றி ஆங்காங்கே காலணிகள் வீசப்பட்டுக் காணப்படுவதாகவும் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு செய்து, அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.