மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான 12-ம் நாள் விசாரணையில், அஜித் குமாரின் சகோதரி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், போலீசாரின் விசாரணையின்போது அடித்து கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிஐ எஸ்.பி ரஜ்பீர் சிங் மற்றும் டி.எஸ்.பி மோகித் குமார் தலைமையிலான அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 14-ம் தேதி விசாரணை துவங்கிய நிலையில், 12-ம் நாள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித் குமாரின் சகோதரி கீர்த்தி மற்றும் சாட்சியம் அளித்த ஆட்டோ ஓட்டுநர் அய்யநார் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் சம்பவம் நடைபெற்ற ஜூன் 27, 28-ம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து அறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.