ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்
திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் ரயில் நிலையம் வழியாக கடந்த 12-ம் தேதி நடந்து சென்ற 10 வயது சிறுமி மர்மநபரால் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிறுமியை கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி இருந்தும் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். தொடர்ந்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை வெளியிட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்த நாளில் குற்றவாளி அணிந்திருந்த டி-சர்ட் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்த டெல்லியை சேர்ந்த காலே விஸ்வகர்மா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட நிலையில், திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்னிலையில் விஸ்வகர்மா ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைதொடர்ந்து விசாரித்த நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.