பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் செந்தூர் மற்றும் பாலக்காடு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து சென்னை மற்றும் பழனி செல்லும் இரயில்களில் பக்தர்கள் கூட்டம் இருப்பதால் போதுமான இருக்கைகள் கிடைப்பதில்லை. இதனால பக்தர்கள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக முன் தமிழ் ஜனம் தொலைக்காட்யில் செய்தி வெளியானது.
இந்நிலையில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.17.5 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் நடந்து வரும் அம்ரித் பாரத் திட்ட பணிகளில் 60 சதவீதத்திற்கு மேலாக நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்போர் அறை மற்றும் குளிர்சாதன காத்திருப்போர் அறைகளில் சில மாற்றங்கள் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அம்ரித் பாரத் திட்டப்பணிகள் அனைத்தும் அக்டோபர் 15-ந் தேதிக்குள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
திருச்செந்தூர் முதல் நெல்லை வரை இரயில் நடைபாதை விரிவாக்க பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அப்பணிகள் நிறைவேற்றவுடன் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 24 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்றார்.
அதே போல் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட அனைத்து ரெயில்களுக்கும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை இயக்குவதற்கான திட்டம் தற்போதுவரை இல்லை என தெரிவித்த அவர் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அம்ரித் பாரத் பணிகள் நிறைவுபெற்றதும் கூடுதல் இரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.