கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார்.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, சோழ பேரரசின் பெருமையை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி, மாமன்னர் ராஜேந்திர சோழனின் வரலாற்று பெருமைகளையும், கோயில் கட்டப்பட்ட வரலாற்றையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கங்கை நீருடன் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, பூரண கும்ப மரியாதை அளித்து, தேவார, திருவாசக பதிகங்களை பாடி, கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்கள் வரவேற்றனர்.
பின்னர், கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரருக்கு தீப ஆராதனை காண்பித்து, பிரதமர் மோடி வழிபட்டார். அவருக்கு, கோயில் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கினர்
பெருவுடையாரை வழிபட்ட பின், பெரியநாயகி அம்மன், சண்டிகேசுவரர், விநாயகர், முருகன் சந்நிதிகளுக்கு சென்று பிரதமர் மோடி வழிபட்டார். தொடர்ந்து, கோயிலின் கட்டட கலையை வியந்து பார்த்தார். இதற்கிடையே, துர்கை அம்மனை வழிபட்ட பிரதமர் மோடி, கோயில் மண்டபத்தில் சிறிது நேரம் தியானம் செய்தார்.