தமிழகத்தில் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என்று அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று எனவும் புகழாரம் சூட்டினார்.
ராஜேந்திர சோழனின் 1005வது பிறந்தநாள் விழா. கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டத் துவங்கியதன் ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்ததன் ஆயிரமாவது ஆண்டு விழா என முப்பெரும் விழா கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்தபடி கலந்து கொண்ட பிரதமர் மோடி, வணக்கம் சோழ மண்டலம் எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.
இளையராஜாவின் இசையில் ஒலித்த சிவபக்தி பாடல்களைக் கேட்டுப் பரவசமடைந்ததாகப் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்த இடத்தில், எனது சகாவான இளையராஜாவின் சிவபக்தி, இந்த மழைக்காலத்தில் மிகவும் பக்தி நிரம்பியதாக இருந்தாகக் கூறினார்.
சோழ சாம்ராஜ்யத்தின் வரலாறும், பாரம்பரியமும் பாரதத்தின் மெய்யான பிரகடனங்கள் என்று கூறிய பிரதமர் மோடி, சோழ சாம்ராஜ்யத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று என்று தெரிவித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சோழ சாம்ராஜ்யத்தில் குடவோலை முறை வாயிலாக ஜனநாயக வழிமுறைப்படி தேர்தல்கள் நடந்ததைக் குறிப்பிட்ட அவர், சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.
சோழப் பேரரசர்கள் பாரதத்தின் கலாச்சார சிற்பிகள் என்று கூறிய பிரதமர் மோடி, அதனால்தான் இன்றும்கூட சைவ பாரம்பரியத்தின் உயிர்ப்புடைய மையங்களில் தமிழ்நாடு மிகவும் முக்கியமானதாகத் திகழ்வதாகத் தெரிவித்தார். திருமூலர் உரைத்த அன்பே சிவம் என்ற கோட்பாட்டை கடைப்பிடித்தால், பெரும்பாலான சங்கடங்கள் தாமாகவே தீர்ந்துவிடும் என்றும் கூறினார். இதைத்தான் பாரதம் ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.
ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் சக்தி வாய்ந்த கடற்படையை உருவாக்கியதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாரதத்தின் வலிமையை வெளிப்படுத்தியது ஆப்ரேஷன் சிந்தூர் என்று கூறினார். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு ஆப்ரேஷன் சிந்தூர் உதாரணம் என்றும் தெரிவித்தார்.
ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணம் செய்தாலும் கூட, அதன் கோபுரத்தைத் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயக் கோபுரத்தை விடக் குறைவானதாக வைத்ததற்குத் தந்தை மீது கொண்டு பற்றுதலே காரணம் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன், அவருடைய மைந்தன் முதலாம் ராஜேந்திரசோழனுடைய பிரமாண்ட உருவச்சிலை நிறுவப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
விழாவில் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் ஷெகாவத், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், எம்.பி., திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.