ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் கடந்த 20ஆம் தேதி ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை 4.30 மணிக்குச் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், இருவரும் திருத்தேரில் எழுந்தருளினர். அப்போது தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.