கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்திய காட்டு யானைகளின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், சேரம்பாடி, தேன்வயல், அம்பலமூலா, குனியல் உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடிவரும் காட்டு யானைகள் விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
குடியிருப்பு பகுதியில் நுழையும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டக் கோரி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கூடலூர் குனியல் பகுதியில் நுழைந்த 3 காட்டு யானைகள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளது.
குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.