முன்னாள் திமுக எம்.பி திரவியத்திற்கு எதிரான வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த சம்மனைக் குறித்த காலத்திற்குள் வழங்காத பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்கள் வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை, திமுக முன்னாள் எம்.பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கத் திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, முன்னாள் எம்பி ஞான திரவியத்திற்கு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை வழங்காதது குறித்து கேள்வி எழுப்பி, அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கடந்த 21-ம் தேதி நீதிமன்ற சம்மன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டது எனக் காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஆய்வு செய்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகுதான் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார். மேலும், நீதிமன்ற உத்தரவு பெற்றுதான் வழக்கை முடிக்க வேண்டுமானால் காவல்துறை எதற்கு எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கடந்த 2024 நவம்பர் முதல் 2025 ஜூலை 21-ம் தேதி வரை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் வரும் 30-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டார்.