உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடாவின் TCS நிறுவனம், தனது உலகளாவிய ஊழியர்களில் 2 சதவீதத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டில் சுமார் 12,000 பேர் வேலைகளை இழக்க நேரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. திடீரென பல்லாயிரக் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்வது ஏன் ? AI வருகையால் இந்த மாற்றம் செய்யப்படுகிறதா ? என்பது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.
2022 முதல் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் IT துறையின் போக்கையே மாற்றியுள்ளன. IT துறையில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் தொழில்நுட்ப நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
2022 ஆம் ஆண்டில், எலான் மஸ்க் X பணியாளர்களில் 80 சதவீத பேரை பணிநீக்கம் செய்தபோது, ட்விட்டரை X ஆக மாற்றுவதற்கு இது அவசியம் என்று பதிவிட்டிருந்தார். 2023- 2024 நிதியாண்டில், கூகுள் நிறுவனத்தில் 10000-க்கும் மேல் ஆட்குறைப்பு செய்யப்பட்டதை, நிறுவனத்தின் வளர்ச்சிக்கான செயல் என்று சுந்தர் பிச்சை குறிப்பிட்டார்.
மெட்டாவின் பணிநீக்க காலத்தை “செயல்திறன் மிக்க ஆண்டு” என்று கூறிய மார்க் ஜுக்கர்பெர்க் 2024 ஆம் ஆண்டில் 3,600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தார். இந்த ஆண்டு, சுமார் 15,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தபோது, இது ‘வெற்றியின் புதிர்’ என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, 169 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 80,150 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், ஆட்குறைப்பு எண்ணிக்கை 152,922 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 264,220 ஆகவும் இருந்தது.
டாடா குழுமத்தின் மென்பொருள் சேவை நிறுவனமான TCS, தனது நிறுவனத்தில் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆட்குறைப்பு முடிவை அறிவித்துள்ளது. தலைமை நிர்வாக அதிகாரியாகத் தான் எடுத்த மிகக் கடினமான முடிவுகளில் இதுவும் ஒன்று என்று டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கீர்த்திவாசன் தெரிவித்துள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, ஊழியர்களின் திறன் குறைபாடு, வர்த்தக சந்தையில் புதிய வர்த்தகத்துக்கான புதிய தொழில்நுட்பங்களின் தேவை என பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தையும், வர்த்தகத்தையும் எதிர்கால வளர்ச்சிக்கு வழிநடத்த சில கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கீர்த்திவாசன் கூறியுள்ளார்.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளிலும் 6,13,069க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சிறந்த வேலை வாய்ப்புச் சூழல் மற்றும் தகுதிக்கேற்ற சம்பளம், வேலைக்கான உத்தரவாதம், மற்றும் பணி பாதுகாப்பு காரணமாக இந்த நிறுவனத்தில் வேலைப் பார்க்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக இருக்கிறது.
இந்நிலையில், நடப்பாண்டில், 12000க்கும் மேற்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையை TCS எடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முதலில்,எந்த ப்ராஜெக்ட்டிலும் இல்லாமல் 30 நாட்களாக பெஞ்சில் இருக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
வாடிக்கையாளர்களின் வேகமாக வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, TCS தனது வர்த்தக வளர்ச்சிக்காகத் தொடர்ந்து முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், நிர்வாக துணைத் தலைவரும் தலைமை மனிதவள அதிகாரியுமான ( Milind Lakkad )மிலிந்த் லக்காட் தெரிவித்துள்ளார்.
வளர்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு, தயார்ப்படுத்தும் நம்பிக்கையில், ஏற்கெனவே, 5,50,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் மேம்பட்ட AI பயன்பாட்டில் சுமார் 100,000 ஊழியர்களுக்கும் பிரத்யேகப் பயிற்சிகளை TCS அளித்துள்ளது.
ஏற்கெனவே உள்ள ப்ராஜெக்ட்களில் பணிசெய்து பழக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழில்நுட்பம் கடுமையான சவால்களாக உள்ளன என்று கூறியுள்ள TCS நிறுவனம், அனைத்து ஊழியர்களும், குறிப்பாக மூத்த பதவிகளில் இருப்பவர்களும், நவீனத் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு சுமூகமாக மாற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
AI மற்றும் ஆட்டோமேஷன், IT துறையில் வேலை அமைப்பையே மாற்றியுள்ளது என்றும், manual testing என்பது பணியை, AI செய்து விடுகிறது என்றும் கூறப்படும் நிலையில், நவீனத் தொழில்நுட்ப மாற்றத்தின் வேகத்தைத் தக்கவைக்க முடியாதவர்களே மிகவும் ஆபத்தில் உள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு இறுதி முடிவுகளும் எடுக்கப்படுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறுவனத்துக்குள் வேறு ப்ரொஜெக்ட்டில் வேலை வழங்கமுடியுமா என்பதையும் கவனத்தில் கொண்டு, படிப்படியாக ஆட்குறைப்பு செய்வதற்கு TCS திட்டமிட்டுள்ளது.
ஊழியர்கள் ஆண்டுதோறும் குறைந்தது 225 பில் செய்யக்கூடிய நாட்களைப் பராமரிக்க வேண்டும் என்றும், பெஞ்சில் இருக்கும் நேரத்தை 35 நாட்களுக்குக் குறைவாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், TCS புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய சில நாட்களில் இந்த ஆட்குறைப்பு அறிவிப்பு வந்துள்ளது.
இந்தச் சூழலில், IT துறையில் பணிநீக்கத்தைக் கட்டுப்படுத்த புதிய திட்டங்களைக் கொண்டுவர மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை ஒன்றாம் தேதி, 99,446 கோடி ரூபாய்க்கு Employment-linked incentive திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், உற்பத்தித் துறையில், அதிக கவனம் செலுத்தவும் இத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.
மூன்றரை கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புக்கள் உருவாக்கும் மத்திய அரசின் இந்த திட்டம் IT துறையில் ஏற்படும் வேலை இழப்பைச் சரிசெய்ய உதவும் என்று கூறப்படுகிறது.