ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியாவின் அதிநவீன ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்ய ஆர்மேனியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. ஆர்மேனியாவின் இந்த நடவடிக்கை, எதிரி நாடான அஜர்பைஜானையும், அதற்கு உதவும் துருக்கி, பாகிஸ்தான் நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
2014ம் ஆண்டிலிருந்து, பிரதமர் மோடி தலைமையில் புதிய இந்தியா கட்டமைக்கப்பட்டது. புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் உலகின் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
2015 ஆம் ஆண்டு, அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) என்ற கொள்கை திட்டத்தைப் பிரதமர் மோடி, அறிமுகப் படுத்தினார். இந்தியாவின் புதிய கடல்சார் பார்வை, சர்வதேச நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
தொடர்ந்து, பிரதமர் மோடியும் ஆர்மீனிய பிரதமர் ( Nikol Pashinyan ) நிகோல் பாஷினியனும் 2019 ஆம் ஆண்டு நியூயார்க்கில் சந்தித்தனர். அதன்பிறகு புவிசார் அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை இந்தியா ஏற்படுத்தியது. 2020ம் ஆண்டு, (Karabakh ) கராபாக் போருக்குப் பிறகு இந்தியாவுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையிலான உறவு வலிமை பெற்றது. அந்தப் போரில், அஜர்பைஜானுக்கு ஆதரவாக, துருக்கியும் பாகிஸ்தானும் நின்றன.
ஆர்மீனியாவுக்கு எதிராக அஜர்பைஜான் இராணுவத்துடன் பாகிஸ்தானின் சிறப்புப் படைகள் களத்தில் நின்று செயல்பட்டன. 2017ம் ஆண்டிலேயே அஜர்பைஜான் மற்றும் துருக்கியுடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, ஆர்மேனியா மற்றும் ஈரானுடன் இந்தியா ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தச் சூழலில், ஐரோப்பாவில் மிகச் சிறிய நாடான ஆர்மீனியா, இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக மாறியது.
முன்னதாக ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்துவந்த ஆர்மேனியா, கடைசியாக 2021ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் 400 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத இறக்குமதிக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தியது. ஆனால் அதில் ஓரளவு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கும் ஆர்மேனியாவுக்கும் இடையே 2020 ஆம் ஆண்டில் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதன் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆண்டுதோறும் வலுவடைந்து வருகின்றன. அஜர்பைஜானிடமிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, இந்தியாவிடமிருந்து மேம்பட்ட ஆயுதங்களை ஆர்மீனியா வாங்கி வருகிறது.
இந்த ஒப்பந்தங்களில் 214 மில்லிமீட்டர் Pinaka multiple rocket launchers,155 மில்லிமீட்டர் Advanced Towed Artillery Gun System என்ற பீரங்கி அமைப்புகள், Zen Anti Drone System என்ற எதிர்-ட்ரோன் அமைப்புகள், ஆகாஷ்-1S மற்றும் ஆகாஷ்-NG வான் பாதுகாப்பு அமைப்புகள், Konkurs anti-tank missile systems, மற்றும் பல்வேறு வெடிமருந்துகள் ஆகியவற்றை ஆர்மேனியா இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்கிறது.
2022-ல் கையெழுத்திடப்பட்ட 720 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஆகாஷ்-1S வான் பாதுகாப்பு அமைப்புக்களின் முதல் தொகுதி கடந்த நவம்பரில் ஆர்மேனியாவிற்க அனுப்பப்பட்டது. அடுத்த தொகுதி இந்த மாதத்தில் அனுப்படவுள்ளது .
இந்தியாவுடனான ஆர்மேனியாவின் ஆயுத இறக்குமதி ஒப்பந்தங்கள், ரஷ்யாவை அரசியல் ரீதியாக சார்ந்திருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. ஆர்மேனியா தனது பாதுகாப்புத் திறன்களை நவீனமயமாக்கும் அவசரத் தேவையில் உள்ளது. விலையுயர்ந்த மேற்கத்திய ஆயுதங்களுடன் ஒப்பிடும் போது, குறைவான விலையில், தரமான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இந்தியாவை நோக்கி ஆர்மேனியா திரும்பியது.
சமீபத்தில் ஆர்மேனியாவின் Colonel Mher Israelian தலைமையிலான குழு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட AK-203 தாக்குதல் துப்பாக்கிகளின் திறன்களை மதிப்பிட்டு வாங்க இந்தியா வந்துள்ளது. ஆயுத தளவாடங்கள், பராமரிப்பு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் இந்தியாவின் உதவியை ஆர்மேனியா நாடுகிறது. இந்தியாவும் ஆர்மேனியாவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்துள்ளது.
கடந்த ஆண்டில் இருந்து ரஷ்யா, ஆர்மேனியா, பெலாரஸ், கஜகஸ்தான், மற்றும் கிர்கிஸ்தான் உறுப்பினராக உள்ள Eurasian Economic Union அமைப்பின் பார்வையாளர் நாடாக இந்தியா உள்ளது. யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையையும் இந்தியா நடத்தி வருகிறது.
வேகமாக மாறிவரும் புவிசார் அரசியலில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எதிர்கால போக்குவரத்து பாதைகளின் சாத்தியமான பகுதியாக ஆர்மேனியாவை இந்தியா பார்க்கிறது. இது, துருக்கியின் செல்வாக்கு மிகுந்த இடத்தில் ஆழமாகக் காலூன்றும் இந்தியாவின் ராஜதந்திரமாகும்.
இதற்கிடையே, இருநாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, துருக்கிக்கு மட்டுமல்ல பாகிஸ்தானுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.