மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு, இந்திய கிராண்ட் மாஸ்டர்களான கொனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் தகுதி பெற்றனர்.
கடந்த சனிக்கிழமை இரு இந்திய வீராங்கனைகளும் மோதிய இறுதிச்சுற்றுப் போட்டி சமனில் முடிந்தது. தொடர்ந்து நேற்று நடந்த ரிட்டர்ன் சுற்றிலும், 34 நகர்வுகளுக்குப் பிறகு ஆட்டத்தைச் சமன் செய்ய இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், டை-பிரேக்கர் சுற்று இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 19 வயதான திவ்யா தேஷ்முக், கொனேரு ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
போட்டி முடிந்தவுடன் வெற்றிக்களிப்பில் ஆனந்தக் கண்ணீர் விட்ட திவ்யா தேஷ்முக், ஓடிச்சென்று தனது தாயை ஆரத்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், மன்ஷுக் மாண்டவ்யா, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.