நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2 ஆயிரத்து 187 கோடி முறை பயணிகள் பயணம் செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 நிதியாண்டுகளில் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வழங்குமாறு மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2 ஆயிரத்து 187 கோடி முறை பயணிகள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக கோவிட் பாதிப்பு நிறைந்த 2020-21 ஆம் நிதி ஆண்டில் 99 கோடி முறை பயணிகள் பொது பெட்டிகளில் பயணித்ததாகக் கூறிய அவர், அந்த எண்ணிக்கை 2021- 22 ஆம் நிதி ஆண்டில் 275 கோடியாக உயர்ந்ததாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து 2022-23 ஆம் நிதி ஆண்டில் 553 கோடி முறையும் 2023-24 ஆம் நிதி ஆண்டில் 609 கோடி முறையும் பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 2024-25 ஆம் நிதி ஆண்டில் 651 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.