தேனியில் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் வீட்டு முன்பு கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளால் பதற்றம் நிலவியது.
தேனி அல்லிநகரத்தில் வசித்து வரும் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், பைபாஸ் சாலை அருகே புதிதாக வீடு கட்டி கடந்த வாரம் புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார்.
புதிய வீட்டின் வளாகத்தை காவலாளி சுத்தம் செய்தபோது சந்தேகத்திற்கிடமான பொருள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக முருகன் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனது வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட நபர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனவும் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.