சென்னையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியைக் காதலிக்கும் விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகி தனசேகரனின் பேரன் அரங்கேற்றியிருக்கும் கொலைச் சம்பவம் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்த நிதின் சாய் மற்றும் அவரது நண்பர் அபிசேக் ஆகிய இருவரும் மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தனர். நேற்று முன் தினம் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து மோதியதில் நிதின் சாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பயணித்த மற்றொரு நபரான அபிசேக் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் காவல்நிலைய காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் நடைபெற்றது விபத்து அல்ல எனவும் திட்டமிட்ட படுகொலை எனவும் தெரியவந்துள்ளது. நிதின் சாய் மற்றும் அபிசேக் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது ரேஞ்ச் ரோவர் கார் ஒன்று வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியதோடு, அந்த காரை ரிவர்ஸ் எடுத்து வந்து நிதின் சாய் மீது ஏற்றுவது போன்ற காட்சிகளும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காரை ஓட்டி வந்தது திமுக கவுன்சிலர் தனசேகரின் பேரன் சந்துரு என்பதும், அவருடன் எட்வின், சுதன், பிரணவ் என மொத்தம் நான்கு பேர் இருந்ததும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை நிதின் சாயின் நண்பர் வெங்கடேசன் என்பவர் ஒருதலைபட்சமாகக் காதலித்து வந்ததாகவும், அதே மாணவியை சந்துருவின் நண்பர் பிரணவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வெங்கடேசனின் ஒருதலைபட்ச காதல் தொடர்பாக பிரணவ், தன்னுடைய கல்லூரி சீனியரும், தனசேகரின் பேரனுமான சந்துருவிடம் புகாராகத் தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக சந்துருவும், அவரது நண்பர்களும் இணைந்து வெங்கடேசனை மிரட்டிய போது அவருக்கு ஆதரவாக நிதின் சாயும், அபிசேக்கும் வந்து தட்டிக்கேட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட தங்களின் மீது வேகமாக மோத வந்த சந்துருவின் கார் கண்ணாடியை நிதின் சாய் மற்றும் அவரது நண்பர்கள் உடைத்துள்ளனர்.
தன்னுடைய சொகுசு காரின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சந்துரு மற்றும் அவரது ஆதரவாளர்கள், மின்னல் வேகத்தில் காரை ஓட்டிச் சென்று நிதின்சாய் மற்றும் அபிசேக் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிதின் சாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நிதின் சாயின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறை, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், சென்னை மாநகராட்சியின் கவுன்சிலருமான தனசேகரின் பேரன் கைது செய்துள்ளது. தனது மகன் மீது காரை ஏற்றியதோடு, அவனை பார்த்து சிரித்துவிட்டு மீண்டும் வாகனத்தை ஏற்றி கொலை செய்த சந்துரு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதின் சாயின் தாய் தெரிவித்துள்ளார்
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மீதான காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதும், மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் காதல் விவகாரத்தில் தொடர்புடைய இருவர்களை விட்டு விட்டு அவர்களுக்கு ஆதரவாகச் சென்ற நண்பர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உயிரிழந்தவர்களின் பெற்றோர்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
கட்டப்பஞ்சாயத்து எனும் பெயரில் அதிகாரத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டு படுகொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய திமுக நிர்வாகி தனசேகரனின் பேரன் சந்துரு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரின் மத்தியிலும் கோரிக்கை எழுந்துள்ளது.